அப்பா


1.
தலைக்கு ஏறியது எரிமலை குழம்பு
தோள்களில் கடுங்கோடை
முதுகில் ஏற்கனவே காடற்ற மலை
காலுக்குக்கடியில் முடிவுறாத பாலை
ஒரு கவளம் சோறு உண்ண
செய்யும் வேலை
நாய் பட்ட பாடுயென அறிந்த பின்னும்
அப்பா சொன்னார்
"பார்த்துக்கலாம் அஞ்ஞா.. "

2. 
கதர் வேஷ்டி சட்டை அணிபவர்.
ஈபி அக்கவுண்டண்ட், 
தினம் சாயங்காலம் ஆயிரம் கால் மண்டபத்தில் உட்கார்ந்து இருப்பவர்
பெத்த அப்பனுக்கும் ஆத்தாளுக்குமே கொள்ளி போடாதவர்
பெத்த மகனை தெருவிலேயே அடிச்சு கூட்டிகிட்டு போனவர்
ரொம்ப கோபக்காரர்
என்றெல்லாம் அடையாளமான அப்பாவை 
எப்படி இருக்கீங்க  என்றதற்கு 
'சிறுநீரகப்பை சுமக்கிறேன்'  என்றார்.

3. 
வட்டியும் வட்டிக்கு மேல வட்டியும்
வருடம் முழுக்க முழ்கடித்தாலும் 
சிவன் ராத்திரி குலசாமி படையலுக்கு
காசு அனுப்புறது நிக்காது அப்பாவுக்கு.
இந்த வருஷம் அதே நாள்ல
தூக்கிக் கொடுத்தோம் அப்பாவை.
இத்துணைக்கும் 
இவ்வருடம் வரை  அவர் அனுப்பிய காசு 
எதுவுமே அவர் பெயரில் இல்லை.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் எதையே நினைத்து கனக்கிறது...

நிலாமகள் said...

இரண்டாம் கவிதையின் கடைசி வரி 'திக்' என்றிக்கிறது.