ஓர் இரவு ஒரு பகல் ஒரு வீடு


இரவு உதிர்ந்து கொண்டிருந்தது.
நிலமிழந்தவர்களின் முகாமிலிருந்த
இறந்தவர்களைச் சுமந்து செல்லும் வாகனமொன்றில்
நட்சத்திரங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.
அதில் எண் வரிசையைப் பதித்துக் கொண்டிருந்தார்
XXX  இலச்சினை தரித்த அதிகாரி.
அனைவருக்குமான வானத்தை அகற்றுவதே அவருக்கு இடப்பட்ட கட்டளை.
நிலவை மறைக்க அவர் குழந்தைகளைப் பாட கட்டளையிட்டு இருந்தார்.
ஆணவத்தின் பிடியுண்ட சொற்களை அறியாத குழந்தைகள் 
பாடுங்கள் என்றவுடனே நடனமிட்டு பாடத்தொடங்கி விட்டார்கள்.
நிலவற்ற பறவைகள் மறையத்தொடங்கின.
அவரால் ஒரு நாளும் முழு இரவை சேகரிக்க முடியவில்லை.

பகல் கரையத் தொடங்குகிறது.
செயற்கைக் கருமுட்டை தயாரிக்கும் நிறுவனத்தின்
குளிர்ப்பெட்டி இணைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையில்
வெயிலை அள்ளிக் கொண்டிருந்தார்கள்.
பரப்பிக்கிடந்த வெக்கையை நெகிழியால் வழித்துக் கொண்டிருந்தார் 
XXY   இலச்சினை தரித்த அதிகாரி.
அனைவருக்குமான நிலத்தை சுருட்டிக் கொள்வதே அவருக்கு இடப்பட்ட கட்டளை.
இலை உதிர்த்த மரங்கள் 
அணுக் கழிவால் கரையொதுங்கிய 
மீனின் கண்களாய் வெறித்துக் கொண்டிருந்தன.
அவரால் எந்நாளும் ஒரு பகலை சேகரிக்க முடியவில்லை.

புத்தனின் விரல் நுனி கதிரொளியால் மினுக்குகிறது
மண்டிக் கிடந்த இருள் உதிரும் நள்ளிரவு
ஆதித்தாய் கூரையற்ற ஒரு வீட்டினை நெய்து கொண்டிருக்கிறார்.

அரூபக் காலக்காட்சிகள் சிதிலமின்றி நீரோவியங்களாய்
ஒப்புக் கொடுத்துவிட்டு கடலைகள் திருப்பிச் செல்லுகின்றன. 

-வேல் கண்ணன்

நன்றி : விகடன் தடம் ஜனவரி 2018

அசையா பெண்டுலம்


நொடிப் பொழுதில் மாறிப் போகின்றேன்
நினைவிலியாகவும் கனவிலியாகவும்
அகத்தடிமையாகவும் புறம்போக்காகவும்.
தனித்தே கிடக்கிறேன்
கனவிற்கும் நினைவிற்கும் ஒரு தப்படி
தெளிவில்லாமல் அலைவுறுகிறேன்.
நிதானித்து நிலையாய் நகர்கிறது காலம்.
நன்றி : தீராநதி. செப்டம்பர்' 2017

வானெங்கும் சாம்பல் நிற குளுமை

Related imageவானெங்கும் சாம்பல் நிற குளுமை
இன்றைய தேதி கிழமை தெரியவில்லை
ஓயாத அலையெழும் பெருங்கடலிலிருந்து 
ஆரஞ்சுக் கோளம் மஞ்சள் உருளையாகி 
மணற் துகளெங்கும் வெண்மை தெளித்தது.
அதனைக் குழைத்து அகர வரிசையில்
தலைப்பிட்டு தொகுப்பாக்கினாள்.
தென்கிழக்கில் மிதக்கும் விண்மீன்களை 
தொட்டுத் தொட்டு ஒளியேற்றுகிறாள்.
விழித்திரையில் 120 பாகையில் துழாவி
'மேகா'வென்றழைத்து தலைவருட
கரைந்து பொழிந்தது தற்செயலானது அல்ல
ஆழியின் குரல் ஓங்காரமாக ஒலிக்கத் தொடங்கியது.

நன்றி : தீராநதி - செப்டம்பர் '2017

குழந்தைமையின் காலம்

(மதிப்புரை- காலச்சுவடு ஆகஸ்ட்'2017 இதழில் வெளியானது)

குழந்தைகள் புத்தகங்களைப் பையிலடுக்கும் திங்கட் கிழமைகளில் அன்று கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் அரைகுறைப் பதில்களும் அதட்டல்களுமே அவர்களுக்குக் கிடைக்கின்றன.                      -பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.
திங்கட்கிழமைகள்’ குறித்த கவிதையில் வரும் வரி இது. இதை என்னால் வாசித்துவிட்டு எளிதில் கடக்க முடியவில்லை. உண்மையில் திங்கட்கிழமைகளில் மட்டுமா நாம் அரைகுறைப் பதில்களைத் தருகிறோம்? பதில்களைவிடக் கேள்விகளைக் கடப்பது மிகுந்த சிரமம். அதுவும் நமக்குத் தெரியாத கேள்விகளைக் கேட்டுவிட்டால்? அதுவும் குழந்தைகள் போன்ற எளியோர் கேட்டுவிட்டால் அச்சமயத்தில் கிடைக்கும் பதிலைச் சும்மா இட்டுக் கட்டுவோம் அல்லது அதை மீறினால் ‘சும்மா இருக்க மாட்ட?’ என்கிற எரிச்சலோடு மேற்கொண்டு, அவர்களின் முகம் பார்ப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிட்டு ‘உலக மகா காரியங்களில்’ ஈடுபடுவோம்.
என்னவாயிற்று நமக்கு, எதற்கு இந்த எரிச்சல், முகம் திருப்பல் யாரிடம்? நம் காலத்துக்குப் பின்னே நாளையும் இருக்கப் போகிறவர்களிடம்.. மனிதம் போற்றுவதும் குழந்தைமையை மதிப்பதும் நம் அனுபவத்திலும் கற்றலிலும் வரவில்லையா என்ன?   எங்கேயோ எதையோ தொலைத்துவிட்டதாய் நினைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறோம். என்ன தேடுகிறோம் என்ற கேள்விக்கு எல்லோரிடமும், ‘நிம்மதியான பாதுகாப்பான வாழ்வு,’ என்ற ஆகச் சிறந்த பொய் ஒன்று இருக்கிறது. இந்தப் பொய்யுலகின் ஆகச் சிறந்த அபத்தமும் கூட. உலகையே ஒற்றைக் குடையின்கீழ் கொண்டுவந்த ஐரோப்பாவைத் தனக்குள் இருக்கும் ஆன்மாவைத் தொலைத்துவிட்டதாக நாவலாசிரியர் ஹெர்மன் ஹெஸ்ஸே (Herman Hesse)கூறுகிறார். இந்த வகையில், டிஜிட்டலைஸ்டு இந்தியாவில் நாம் இழந்து வருவது  குழந்தைமை என்னும் பேராற்றலை! ஒளிவேகத்தைத் தொடப்போகும் இன்றைய பெருவளர்ச்சிப் பாதையில் நம்முள் இருக்கும் குழந்தைமைகளைத் தொலைத்து விடுகிறோம் என்பதில்லாமல் தற்காலக் குழந்தைகளிட மிருந்து அதனைப் பிடுங்குகிறோம். நோயும் நொடியுமாக இருந்தபோதிலும் மருந்துகளின் துணைகொண்டு  சராசரி மனித ஆயுட்காலத்தை அதிகரித்துக்கொண்டதாக மார் தட்டிக் கொள்ளும் நாமே, குழந்தைகளின் குழந்தைமைக் காலத்தைக் குறைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

ஆனாலும் காலம், எதிர்த் தன்மையில் பயணிக்கும் அல்லது கடக்க நினைக்கும் மனித இனத்தைத் தோற்கடித்துக் கொண்டே இருக்கிறது. என்னளவில் குழந்தைமைகளைப் பறிக்க நினைப்பவர்களும் இப்படி ஏமாந்து நிற்பதாகவே எண்ணுகிறேன். என் நினைப்புக்குச் சாட்சியாக இதோ ந. பெரியசாமியின் ‘குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்.’
ந. பெரியசாமிக்கு இதற்குமுன் மூன்று தொகுப்புகள் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட என்பதைவிட இதில் இன்னும் கவனத்துடன் மொழியை மிக நுணுக்கமாகக் கையாண்டு குழந்தைகளின் உலகத் திற்குள் பிரவேசித்து இருக்கிறார். அதே கவனமும் நுணுக்கமும் வாசிப்புக்குத் தேவைப்படுகிறது. ஒருவேளை இதனை நீங்கள் மறுவாசிப்புக் கோரும் கவிதைகள் என்று எடுத்துக்கொண்டாலும் தவறில்லை. நம் ‘மேதைமை’ தாங்கிய கண்களின் முன்னே ஒரு காட்சியாக,  குழந்தை களின் ‘பேதைமை’ பொங்கும் செயல்பாடுகளைச் சொல்லும்
கவிஞர், முடிவில் அந்தக் காட்சிகளைத் திரும்பிப் பார்க்கவைத்து வேறு தரிசனங்களைத் தருவிக்கிறார்.
புதைந்த  குரல்கள்
தரையில் படுத்திருந்தவன் / உஷ்..யென பெரும் சப்தமிட்டு / அமைதியை வாங்கினவன் / நெடுநேரம் காதுகொடுத்து / ஆச்சரியத்தோடு அழைத்தான் / தவளை கத்துகிறதென / அடப்போடாவென்று புறக்கணித்தோம் / அவ்வப்போது தொடர்ந்தபடி இருந்தான் / வாத்து போகிறது / கொக்கு கூப்பிடுகிறது / பாம்பு சீறுகிறது / மீன்கள் கொஞ்சுகின்றதென...
மதிய பொழுதொன்றில் / வெய்யிலுக்காக வீட்டின்முன் ஒதுங்கியவர் / அப்பொழுதெல்லாம் அடர்ந்த மரங்கள் சூழ / பெரும் குளம் இருந்தது / இங்கே என்றார்.
மேலோட்டமாக இந்தக் கவிதையைப் பார்க்கும்போது அந்தச் சிறுவன் தீர்க்கதரிசி என்கிற ஆபத்தான பார்வை யைத் தவிர்த்து, கவனத்துடன் அதன் நுண்ணியக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும்.  இந்த வகையில் சிறுவன் மொசைக் கல்லில் வாழவில்லை. அடர்மரங்களுடன் தவளை, வாத்து, கொக்கு, பாம்புடன் வாழ்கிறான். சொல்லப்போனால் குளத்தில்தான் தூங்குகிறான். எதனையும் அவனிடமிருந்து பறிக்காமல் காலம், அவன் நினைவுகளில் ஊடுருவி அவனுக்கான உலகத்தைத் தருகிறது.
‘சாயற்கனி’ என்னும் கவிதையில்..
தொட்டி வளர்த்திருந்தது / மணத்தக்காளி செடியை / சாயமேறித் தொங்குகின்றன / நீர்த்துளிகளாக கனிகள் /
இதில் ‘வளர்த்திருந்தது’ என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டால் கவிதையில் முழு அர்த்தமும் இழந்து கவிதை தட்டையான பார்வையைத் தந்துவிடும் அபாயம் உண்டு. இப்படியாக மொழிதலை மிக நுண்ணிய தன்மையுடன் கையாண்டு பல திறப்புகளைச் செய்கிறார்.
உண்மையில், குழந்தைகளிடமிருந்து மரப்பாச்சியைப் பறித்தால் அவர்கள் நட்சத்திரங்களிடமிருந்து அதனை வாசனையுடன் பெறுவார்கள். நிழலைத் தராமல் போனால் ஒரு மரத்தையும் அதனைச் சார்ந்தவற்றையும் பறவைகளிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். மீன்களைக் காண்பிக்காமல் போனால் திமிங்கலத் தீவை உறவாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தனக்கானதைப் பூமியின் ஆழத்திலிருந்தும் வான், வெளி, பிரபஞ்சங்களில் இருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள்.. அப்படி உருவாக்கிய ‘அருவி’..
இறுக மூடினான் முன்பின் கதவுகளை / திரைச்சீலைகளால் மறைத்தான் ஜன்னல்களை / துவட்டிக் கொள்ளவென துண்டுகளைக் கொடுத்தான் /அவனது அடுத்த கோமாளித்தனமென பரிகசித்துக் கொண்டிருக்கையில் சாரலில் நனையத் துவங்கினோம் / சித்திரத்தில் பிறப்பித்திருந்தான் அருவியை.
இதில் ஓர் அருவியை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல் பிறரை நனைக்கவும் செய்கிற மனம் குழந்தைகள் தவிர வேறு யாருக்கு வரும்? ‘அலெக்ஸ் மரம்’ என்னும் கவிதையில் மரத்தை உருவாக்கி அதற்கு நாமகரணமும் செய்துவிடுகிறது இம்மனம். ஆம், படைத்தவன் அறிவிப்பதுதானே சரி?
இங்கே வேறொன்றையும் குறிப்பிட வேண்டும். தொகுப்பில் இப்படியாக நிறைய சித்திரங்கள் குழந்தைகளால் வரையப்படுகின்றன. ஆதியில் ஒரு சொல் இருந்தது என்பார்கள்; அந்தச் சொல்லின் வடிவம் ஒரு சித்திரமாக இருந்திருக்க வேண்டும் என்ற அனுமானத்தைத் தவிர்க்க முடியவில்லை.
தொகுப்பு முழுக்க குழந்தைகளின் ஆதங்கம், கற்பித்தல், கற்பித்தலை மீறும் உடைப்புகள், தேடல்கள்  போலவே அவர்களுக்குள் என்றுமே கனன்றுகொண்டிருக்கும் மாய உலகைப் பல கவிதைகளில் உருவாக்குகிறார்  ந. பெரியசாமி. அவருக்கு இது மிகச் சரியாய்க் கைவந்திருக்கின்றது. கவிதைக்குள் ஒருவித மாயப் புனைவு சேரும்போது அக்கவிதைக்குத் தனித்த அடையாளம் கிடைத்துவிடுகிறது. மாய உலகம் என்கிறபோது நான்கு தலை, எட்டுக் கைகள், மூன்று வால் போன்ற ‘அவதாரங்களை’ உருவாக்காமல் அருவி, மரம், கனி, கனியின் நிறம், அடர் கானகம், கதை சொல்லும் நட்சத்திரங்கள், தொடர் மலைகள், தனித்த வானத்திற்குத் துணையாய் நிலா, சூரியன், நட்சத்திரங்கள் என்று கை நழுவிச் செல்லும் இயற்கையை மாய உலகத்துள் கொண்டு வருகிறார். இது மேலும் கவிதைக்கு நிலைத்தன்மையைத் தருகிறது
‘இது கதையல்ல..’
அன்று வானம் / நெருக்கமான நட்சத்திரங்களோடு இருந்தது / தூண்டிலை / வான்நோக்கி வீசிக்கொண்டிருந்தான் / செய்கை புரிதலற்றிருக்க வினவினேன் / பூத்திருக்கும் மீன்களை / பிடிப்பதாக கூறினான் / பார்க்கக் கேட்டேன் /அனுப்பி விட்டேனென்றான் / அழும் குழந்தைகளுக்கு /கதை சொல்ல.
குழந்தைகளின் உலகத்தை அந்தக் குழந்தைகளே சொல்ல, கேட்க, வரைய, படைக்க அதனை நமக்குக் காட்சிப் படுத்திக்கொண்டே வருபவர் ‘நிழல் சுவை’ என்கிற கவிதையில் அவரே அதுவாக மாறும் விந்தை தெரிகிறது. தொகுப்பில் மிகச் சரியாய் வந்திருக்கும் கவிதை இது.

உப்பு நீரில் ஊற வைத்து / கழுவிய திராட்சையை / தின்றிடத் துவங்குகையில் / நரி வந்து கேட்டது / நாலைந்தை ஆய்ந்து கொடுத்தேன் / புலி வந்தது / சிறு கொத்தை ஈந்தேன் / குட்டிக்கரணம் இட்டவாறு / குரங்கு வந்ததைத் தொடர்ந்து / ஆடு மாடு கோழி பூனையென / மகனின் உருமாற்றப் படையெடுப்புகள்...
எனக்கேதும் வேண்டாமென / கொடுத்த திராட்சையின் சாயலை / விழுங்கிக்கொண்டிருந்தேன்.
தொகுப்பு முழுக்கவே குழந்தைகள் தவறவிட்ட உலகத்தை மீட்டு எடுப்பது போலவே பல கவிதைகள் இருப்பதாலும் தொடர் கவனப்பட்ட வாசிப்பைக் கவிதை கோருவதாலும் ஒருவிதச் சலிப்புத்தன்மை எழுவதைத் தடுக்க முடியவில்லை.
பள்ளிக்கூடம்’ (பக்.9): அதன் நுழைதலில் ‘கையசைப்பின் புன்னகை’ (பக்.21), அதனில் நுழைந்ததின்  விளைவாக ‘வலியின் சித்திரங்கள்’ (பக்.8) போன்றவை  நமது கல்வி அமைப்புபற்றிக் குறை கூறினாலும், ஒவ்வொரு குழந்தையுமே ஒவ்வொரு உலகம் என்பதை மறுக்க முடியாது. பல்வேறு உலகம் ஒரே கூரையின்கீழ் சேரும்போது அவரவர்களின் தனி உலகிலிருந்து தங்களுக்கான கனவு உலகத்தை மீட்டுருவாக்கம் செய்துகொள்கிறார்கள். இதனை நாம் கண் கூடாகப் பார்க்கலாம். ஆண்டாண்டு காலமாய் வேப்பமர உச்சியிலிருந்து இரயிலு வண்டிவரை ‘பூச்சாண்டி’ தொடர்வதை இடித்துரைத்தவர் (‘பூச்சாண்டி கவிதை’ பக்:16) இதையும் ‘கரு’வாக வைத்து இருக்கலாம் என்பது என் எண்ணம்.
குழந்தைகள் இழந்த உலகம், மண், காற்று, நீர்மை, விளையாட்டு, சக உயிரினங்களுடன் உறவு, பயணம் போன்றவற்றை எல்லாம் வற்றிப்போக வைத்ததின் பின்னணியாக விளைநிலங்களைக் களவு செய்யும் சமூக மாற்றமும் சுயநல அரசியலும் உள்ளது என்பதையும் அதற்குப் பலி கொடுக்கப்படுவது நம் தலைமுறைகள் என்பதையும் நேரடியாகச் சொல்லாமல் ஒருவித  குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்துகிறார் கவிஞர்.
தொகுப்பின் சிறப்பாக, தனித் தன்மையாக நான் கருதுவது  குழந்தைகள் செய்வதைத் தள்ளிநின்று அப்படியே நமக்குக் காட்சிப்படுத்துவதே. அவர்கள் செய்வதை, சொல்வதை, கேட்பதின் மூலம் இது இதனைக் குறிக்கின்றது போன்ற நீதி சொல்லும் விவரணைகளைத் தெரிந்தே தவிர்த்திருக்கிறார். இந்த ‘தவிர்த்த’ காட்சிப் படுத்தல், தாயிடம் பால் குடித்த குழந்தை அப்படியே வாய் பிளந்து மணம் குறையாமல் உறங்கும் தருணத்தில், துடைப்பதற்குக்கூட மனமில்லாமல் அந்த அழகை அவ்வண்ணமே ரசிப்போமே.. அது போன்ற ஓர் அழகைத் தொகுப்புக்குத் தருகிறது.  அப்படியே துளியும் சிந்தாமல் குறையாமல் அவ்வழகை அள்ளித் தருகிறது வடிவமைப்பும் அட்டைப் பட ஓவியமும். வியப்பைத் தரும் விலையுடன் மிக நேர்த்தியாகத் ‘தக்கை பிரசுரம்’ வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
(கவிதைகள்)
ந. பெரியசாமி
வெளியீடு:
தக்கை
15, திரு.வி.க. சாலை,
அம்மாப்பேட்டை
சேலம்- 3
பக்கம்: 40  
ரூ. 30

நன்றி : ந.பெரியசாமி, பாலசுப்ரமணியம் பொன்ராஜ், தக்கை பதிப்பகம், காலச்சுவடு

இந்த நாள் உன்னைப் பற்றி எழுதச் சொல்கிறதுமுன் அந்தியில் பேரலை கண்டு வியந்த இத்தருணத்தில்
முதல் முறை கைகளைப் பற்றிக் கொண்டதை நினைத்துக் கொள்கிறோம் .
நதியின் குளிர்மை வானமெங்கும் விரவியிருப்பதை உணர்கிறோம்.
கீச்சொலிகளின் சங்கமம் சிற்றோடையின் ரீங்காரத்தைக்  கடத்துகின்றன.
தூய மெல்லுடலின் கனிவு முன் பனியை மலர்த்தியது.
மோனத் தகிப்பு நிலமெங்கும் புனைவதை தேகச்சூடு உணர்த்துகிறது.
மேனியெங்கும் மேவிய விழி வருடல் ரோமங்களில் மீச்சிறு துளியை உதிர்க்கிறது.
வார்த்தை தள்ளாடுகையில் தூவலாய் தெளிக்கிறது கதகதப்பான பசலை.
சர்ப்பம் நிகர்த்த பெருமூச்சு நம்மிடையேயான இடைவெளியை சுக்குநூறாய்  நொறுக்குகிறது.
விரல் சேர்ப்பில் செவ்வந்தி தளர்ந்து இருள் போர்வையில் ஒடுங்குகிறது.
இந்நாள் வரை துயின்ற மழையொலி சிலிர்த்து எழுகிறது 
பிழம்பின் பொறிகளென.
இரவின்  பேருரு தீண்டலற்ற
தனிமையின் அகாலத்தை அசை போடுகிறது.

நன்றி : விகடன்தடம்'ஆகஸ்ட் 2017

கண்டடையும் உன்மத்தம்இரவு பனியாய்
நோய்மையின் பேரச்சம் நீக்கமற்று கிடக்கிறது.
அரவம் தழுவிடிலோர் மேனி
உடற்கவசங்களை தரித்துக் கொண்டது.
முன் இறந்த காட்டுயுயிர் ஆவிகளின் தாகத்திற்கு
வற்றாத நீருற்றுகளை அடைய இன்னும் சில கணங்களே.
மிகு உலகில் மிகு வெக்கையில்
மிகு அலைதலில் மிகு தனிமையில்
கண்டடைய கூடும் முரண்களின் அடையாளம்.

நன்றி : மலைகள்.காம்
ஓவியம் : Jean basquiat boxer(இணையத்தில் எடுக்கப்பட்டது)

கதிரொளியால் உருகாத உறைபனி கட்டிகள்
உன்னுடன்
கடற்கரை சாலையில் நடந்தேன்.
அங்காடித் தெருக்களைக் கடந்தேன்.
திரையரங்குகளை விமர்சித்தேன்.
கோவில்களை வலம் வந்தேன்.
குளங்களை நேசித்தேன்.
குறிப்பாக, அந்த வில்வ மரத்தடி குளம்.

கனமற்று போன கணத்தில்
ஒரே ஒரு பொழுதையேனும் குற்றமில்லா
நகரத்தில் வாழ்வதை அறிந்தேன்.

எல்லா பொழுதுகளும் வெண்மையில்
கழிக்க விரும்பினாலும்,
இடர் செய்யும் அந்நியர்களின் தலையிடும்
அனுமதியுடனே நிகழ்ந்தது.

உன்னிடமிருந்து வரப்பெற்ற
இந்த வெறிச்சோடிய குறுஞ்செய்தியில்
யாதொன்றையும் அறியேன்
எதனின் பொருட்டு பித்தாக வேண்டும் என்பதை.

நன்றி : மலைகள்.காம்
நிழற் படம் Thanks to Goran Kalanji